சனி, 28 ஏப்ரல், 2012

எதற்காக இந்த முயற்சி?

நேர்முகதேர்வுகளுக்காக பல முறைகள் கல்லூரிகளுக்கு சென்றபோதும் பொறியியல் பட்டப் படிப்பை  முடித்து வேலையில் சேர்ந்த பிறகு அளிக்கப்படும் பயிற்சியின் போதும் ஆயிரக்கணக்கான  மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக  வாய்த்தது. இந்த உரையாடல்களின் போது எனக்கு இந்த மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி பற்றிய  உண்மைகள் தெரிய வந்தது. 

மேலும் என் மகனுடைய +2 கணினி அறிவியல் ஆங்கில வழி பாடநூலை பார்த்தபோதும் ஆர்வத்தில் உந்தப்பட்டு தமிழ் வழி பாடநூலை படித்த போதும் வெறும் துயரமே மிஞ்சியது.
இதை பற்றியெல்லாம் என்னுடைய இன்னொரு வலைப்பூவில் (ப்ளாக்) விவரமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். 

கல்வி நிறுவனங்கள் கல்லூரியில் நடத்தப்படும் நேர்முகதேர்வுகளுக்கு நிறுவனங்களை அழைப்பதிலும் அதைப்பயன்படுத்தி மாணவர்களை சேர்ப்பதிலும் காட்டும் ஆர்வம் அவர்களுக்கு நல்ல கல்வி கொடுப்பதில் இல்லை. இதை நான் என்னுடைய வேலையை விட்டு விட்டு சொந்தமாக தொழில் தொடங்கிய பிறகு சந்தித்த கல்வியாளர்களிடமிருந்து அறிந்து கொண்டேன். 

தமிழ்நாட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களில் பலர் அதற்கு முன் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள். கல்லூரியில் சேர்ந்த பிறகு ஆங்கிலத்தில் படிப்பது அவர்களுக்கு கடினமாக இருப்பது ஒரு புறம், அவர்களுக்கு கற்றுக்கொடுக்க நல்ல ஆசிரியர்கள் இல்லாதது இன்னொன்று. பொதுவாக எல்லோரும் தரமான நூல்களை படிப்பதில்லை. அப்படியே படிக்க கிடைத்தாலும் அது அவர்களுக்கு புரிவது கடினமாக உள்ளது. இதைப்பற்றியும் நான் எழுதிவிட்டேன்.

படித்து முடித்தபின் வேலை கிடைக்கும் வரை அவர்கள் இருபது முதல் ஐம்பது ஆயிரங்கள் வரை செலவு செய்து (பெற்றோர் காசைத்தான்) எங்காவது ஜாவா, டாட் நெட் போன்ற எதாவது ஒரு பயிற்சியில் சேர்கிறார்கள். அங்கும் அவர்களுக்கு முறையான கல்வி கிடைப்பது இல்லை.

நான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்காக இல்லாமல் நான் நடத்தும் நிறுவனத்திற்காக நேர்முகத்தேர்வு நடத்தும்போது பெரும்பாலோர் தமிழில் கேள்வி - பதில் இருப்பதை வசதியாக உணர்ந்தனர். மேலும் கடந்த வருடம் நான் பத்து பேருக்கு ஜாவா கற்றுத்தர வேண்டி இருந்தது. அவர்கள் அனைவருமே தமிழ்நாட்டின் சிற்றூர்களில் தமிழ் வழியில் படித்தவர்கள். பொறியியல் பட்டதாரிகளும் அல்ல. அவர்களுக்கு நான் தமிழிலேயே விளக்கங்கள் அளித்து கற்றுக்கொடுத்தேன். பயிற்சி முடிந்த பிறகு நான் அவர்களுக்கும் முன்பு என்னால் பயிற்றுவிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரிகளுக்கும் எந்த ஒரு வேற்றுமையையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதனால் தாய்மொழியில் பயிற்றுவிப்பதன் பயனை நான் அப்போதுதான் உணர்ந்தேன் என்பது அர்த்தம் அல்ல. ஏனென்றால் நானும் தமிழ் வழியில் பள்ளிப்பாடம் படித்தவன்தான். இது எனக்கு இந்த முயற்சிக்கான இன்னொரு உந்துதல்.

இன்னொரு செய்தி, இந்த வலைப்பதிவில் Techical terms எனக்கூறப்படும் கலைச்சொற்களை நான் தமிழ் படுத்தப்போவதில்லை. இதற்கு பல காரணங்களை என்னால் கூறமுடியும். 

1  தனித்தமிழ் தனித்தன்மையை  அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை. அனால் அது நம்மை தனிமைப்படுத்தி விடக்கூடாது. நாளை வேலை பார்க்கும் இடத்தில ஒரு தெலுங்கரிடமோ அல்லது ஒரு மலையாளியிடமோ போய் "Can you please explain this இனக்குழு ?" என்று கேட்பது நன்றாக இருக்காது.
2  இந்த வலைப்பதிவினால் பயனடையப்போகும் பலருக்கு "பஸ்ஸில் பயணம் செய்ய கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கு" அன்று சொன்னால்தான் புரியும். 
3  காலங்காலமாக நாம் சாப்பிடும் எலுமிச்சை சோறையும் தயிர் சோறையும் விற்பனை செய்யும்போது லெமன் ரைஸ் என்றும் கர்ட் ரைஸ் என்றும் சொல்லி பழக்கப்பட்டு விட்டோம். அது போல இதுவும் ஒரு வணிக நோக்கம்தான். உங்கள் அறிவை விற்க ஆங்கிலத்தை பயன் படுத்துங்கள். அதை புரிந்து கொள்ளவும் தெளியவும் தாய் மொழியை பயன் படுத்துங்கள்

இது தமிழ் மாணவர்கள் பயனடைவதற்கான ஒரு முயற்சி அவ்வளவுதான்.

இதைப்படிப்பவர்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் தயங்காமல் தெரிவியுங்கள். என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். 

நன்றி
பாலா



4 கருத்துகள்:

  1. //...உங்கள் அறிவை விற்க ஆங்கிலத்தை பயன் படுத்துங்கள். அதை புரிந்து கொள்ளவும் தெளியவும் தாய் மொழியை பயன் படுத்துங்கள்

    சத்தியமான வார்த்தைகள்.

    தங்கள் சேவை எங்களுக்கு தொடர்ந்து வேண்டும். நன்றி.

    பதிலளிநீக்கு
  2. நான் மிகுந்த ஆவலுடன் இருக்கிறேன் சகோதரரே ! உங்களுக்கு எங்களின் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. மிக்க நன்றி....... தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. மிக்க நன்றி....... தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு