சனி, 28 ஜூலை, 2012

படி 3 - OOP என்றால் என்ன ?

படி 2 லேயே மிக நீண்ட காலம் காத்திருந்து விட்டீர்கள். கடந்த இரண்டு மாதங்களில் என்னால் இதற்கு நேரம் செலவிட முடியவில்லை மேலும் மாணவர்களும் தேர்விலும் விடுமுறையிலும் இருந்தார்கள். இனிமேல் இதற்கு எந்த ஒரு இடைஞ்சலும் இருக்காது என்று நம்புகிறேன்.கூடுமானவரையில் தடங்கல் இல்லாமல் பயணிப்போமாக.


Object Oriented Programming என்பதின் சுருக்கமே OOP. இதை "ஓ ஓ பி" என்று கூறுவதே முறையாகும். ஆனால் பெரும்பாலோர் இதை "ஊப்" என்றே கூறிவருகிறார்கள். இது தவறானது. பள்ளி மேல்நிலை புத்தகத்தில் கூறியிருந்தாலும் தவறானதே. ( இது போலத்தான் SAP என்பதை நாம் ஸாப் என்றே கூறி வருகிறோம். அனால் சரியான முறை "எஸ் ஏ பி" என்பதுதான்.)


OOP க்கு முன்னால் வழக்கிலிருந்த முறை procedural programming எனப்படும். BASIC, FORTRAN, COBOL மற்றும் C மொழிகள் இந்த முறையை சார்ந்தவையே. 


இந்த இரண்டு முறைகளுக்கும் என்ன வேறுபாடு என்பதற்கு பல எடுத்துக்காட்டுகளை பல பேர் பல முறை சொல்லியகிவிட்டது. ஆனாலும் மரபு கருதி நானும் சில உதாரணங்களை இங்கே கொடுக்கப்போகிறேன்.


நீங்கள் ஒரு பொதுத்தேர்வோ அரசாங்கத்தேர்வோ எழுதப்போவதாக வைத்துக்கொள்வோம். முதலில் உங்களுக்கு ஒரு அனுமதிச்சீட்டு வழங்கப்படும். அதில் ஒரு எண் குறிப்பிடப்பட்டு இருக்கும்.


தேர்வு நடக்கும் இடத்துக்கு நீங்கள் சென்றவுடன் நீங்கள் என்ன செய்வீர்கள்? தேர்வு மையத்தில் இருக்கும் அறிவுப்புப்  பலகையை சென்று பார்ப்பீர்கள். அங்கு ஒவ்வொரு தெரு நடக்கும் அரை எண் மற்றும் அதற்கு நேரே அதில் தேர்வு எழுதப்போகும் மாணவர்களின் அனுமதிச்சீட்டின் முதல் எண் மற்றும் கடைசி எண் குறிப்பிடப்பட்டு இருக்கும். நீங்கள் உங்கள் அறையை எளிதாக கண்டுபிடித்து செல்ல முடியும். நீங்கள் அந்த அறையை அடைந்து உங்கள் தேர்வை சரியான நேரத்தில் எழுத ஆரம்பிக்கலாம்.


ஆனால், ஒரு அரசாங்க அலுவலகத்துக்கு ஒரு வேலையாக நீங்கள் சென்றால் எங்கு செல்ல வேண்டும் யாரைப்பார்க்க  வேண்டும் என்பது புரியவே சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் ஆகலாம் .


நீங்கள் தேர்வு எழுத செல்லுமிடத்தில் ஒரு அறிவிப்பு பலகைக்கு பதிலாக ஒருவர் நாற்காலி மேசை போட்டு அமர்ந்துகொண்டு இருக்கிறார். அவர் கையில் இருக்கும் ஒரு தாளில் எந்த அனுமதிச்சீட்டு எண் எந்த அறையில் தேர்வு எழுத வேண்டும் என்ற குறிப்பு உள்ளது. எண்களும் வரிசையாக அறைகளில் ஒதுக்கப்படவில்லை என்றால் என்ன ஆகும்? கற்பனை செய்து பார்க்கவே எப்படி இருக்கிறது?


நீங்கள் தாமாகவே தேர்வு அறையைக் கண்டுபிடிப்பது OOP  போல. பின்னது procedural programming  போல.


ஒரு system  ல் இருக்கும் ஒவ்வொரு பொருளுக்கும் அதனதன் வேலையைப் பற்றிய அறிவு இருந்த அது OOP.


இரண்டாவது முறையில் நீங்கள் ஒரு எண்ணாக மட்டும் பார்க்கப்படுகிறீர்கள். உங்கள் எண் எந்த அறையில் இருக்கிறது என்று மற்றொருவர் சொல்கிறார். 


நாம் சாப்ட்வேர் ப்ரோக்ராம் எழுதுவது ஒரு System (அமைப்பு) அல்லது process (செயல்முறை) ஆகியவற்றை கணினியின் துணை கொண்டு எளிமை ஆக்கத்தான்.


அந்த system  ல் இருக்கும் பல்வேறு பொருள்கள் எப்படி கையாளப்படுகிறது என்பதை பொறுத்துத்தான் OOP என்பது அமைகிறது.


உதாரணமாக ஒருவரின்  வயதைக் கணக்கிட வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்?


int age = calculateAge(11, 5, 1983);


இந்த முறை procedural. இங்கு நீங்கள் ஒரு தேதியை அடிப்படையாக வைத்து வயதைக் கணக்கிடுகிறீர்கள். தேதி என்பதும் ஒரு தேதியாக இல்லை. நாள், மாதம், மற்றும் வருடம் என எளிய எண்களாக உள்ளது. இந்த 11, 5, 1983 என்பது பிறந்த தேதியா அல்லது வேறு எதாவது தேதியா என்ற தங்கவலும் இல்லை.


எளிய தகவல்களின் அடிப்படையில் எல்லா கணக்கீடுகளும் கையாளப்படுவது நடந்தால் அது procedural program. இங்கு ஒவ்வொரு தகவலும் சில பல function களுக்கு  அனுப்பப்படும். இந்த தகவல்கள் எந்த பொருளை சார்ந்தது அதன் பொருள்(அர்த்தம்) என்ன என்பதைப்பற்றி அந்த function களுக்கு கவலை இல்லை. இந்த function கள் பொருளை சார்ந்து இல்லை. ஒரு பொருள் என்பதே இதில் கிடையவும் கிடையாது. 


ஆனால் இதையே OOP ல் 


int age = somePerson.getAge();


என்று எழுதலாம் . இதில் somePerson என்பது ஒரு பொருள். getAge என்ற function அந்த பொருளை சார்ந்து உள்ளது. வயதைக் கணக்கிடும் செயல் முறையும் அந்த பொருளிலேயே உள்ளது. எல்லா function (செயல்முறை) களும் பொருட்கள் சார்ந்தே இயக்கப்படும்போது அது OOP .


OOP  என்பதை பொருள் சார்ந்த நிரலாக்கம் என்று பொருள் கொள்ளலாம்.


மற்றொரு உதாரணம் பேசிக் மொழியில் 


A$ = "Hello"
PRINT len(A$)


இங்கு len  என்பது ஒரு சொல்லின் நீளத்தைக் காண உதவும் செயல். இங்கு len என்னும் செயலுக்கு Hello  என்ற சொல் அனுப்பப் படுகிறது.


ஆனால் இதுவே OOP (Java) மொழியில் 


String a = "Hello";


System.out.println(a.length());


இங்கு length என்னும் செயல்பாடு String எனும் பொருளை சார்ந்தே உள்ளது. இங்கு ஒரு String  பொருள் அதி உள்ள எழுத்துக்களை அளிக்கலாம்.


rectangle1.length() என்பதில் length என்னும் செயல்பாடு ஒரு செவ்வகத்தின் நீளத்தைக் கொடுக்கலாம்.


ஒரே பெயர் உள்ள ஒரு செயல் அது சார்ந்திருக்கும் பொருளை பொருத்து மாறுபடும். இதுதான் OOP ல் உள்ள ஒரு வசதி.


பொருளையும் செயலையும் இணைப்பது நடுவில் உள்ள புள்ளியே. ஒரு பொருளுக்குள் இருக்கும் மற்றறொரு பொருளையும் காண உதவுவதும் இதே புள்ளிதான்.


rectangle1.length() என்பதில் ஒரு செவ்வகதையும் அதன் செயலையும் இணைக்கிறது.


System.out.println() என்பதில் System  என்ற பொருளில் உள்ள out என்ற பொருளை கொட்டுக்கிறது. இரண்டாவது புள்ளி out  என்ற பொருளையும் அதன் println என்ற செயலையும் இணைக்கிறது. 


aCircle.centre.getX() என்பதில் circle  எனும் பொருளில் உள்ள centre என்னும் பொருளின் (இது ஒரு coordinate பொருள்) x மதிப்பை கொடுக்கிறது. ஒவ்வொரு புள்ளியாக வைத்து ஒவ்வொரு பொருளின் உள்ளேயும் நுழைந்து கடவுள் துகள் வரைக்கும் செல்ல முடியும்.


இது வரை கற்றவற்றை வைத்துக்கொண்டு procedural (???) முறையில் Java மொழியில் உள்ள சில பொருட்களை கையாளக் கற்றுக்கொள்ளலாம்.


Procedural  முறையின் சில வழி முறைகளையும் விதிகளையும் பயன்படுத்தி முதலில் பொருட்களை கையாண்டு பிறகு நாமே பொருட்களை உருவாக்க முடியும்.


அதை அடுத்து பார்க்கலாம்.

திங்கள், 30 ஏப்ரல், 2012

படி 2 - எக்லிப்ஸ் இன்ஸ்டால் செய்ய

ஜாவா ப்ரோக்ராம்களை எழுத முக்கால்வாசி மாணவர்கள் நோட்பாட் எனும் எடிட்டரை பயன் படுத்துகிறார்கள். இதில் எழுதும்போது சின்டாக்ஸ் தவறுகள் அதிகம் வரும். அதிகமான நேரம் வீணாகிவிடும்.
எக்லிப்ஸ் (Eclipse) மற்றும் நெட்பீன்ஸ் (Netbeans) போன்ற மென்பொருள்கள் IDE ( Integrated Development Environment) க்கள் என்று அழைக்கப்படுகின்றன. இதில் ப்ரோக்ராம்களை எழுதும்போது நேரம் வீணாவதில்லை. முக்கல்வாசி சின்டாக்ஸ் தவறுகளை ப்ரோக்ராம் எழுதும்போதே திருத்திக்கொள்ள முடியும். ஆனால் உங்கள் தேர்வுகளில் கேட்கும் கேள்விகளுக்கு உங்களுக்கு பதில் தெரியாமல் போய்விடக்கூடிய சந்தர்ப்பம் உண்டு. 
ஏனென்றால் தேர்வுகளில் முக்கால்வாசி கேள்விகள் ஒரு விடுபட்ட எழுத்து (; , :, =) அல்லது ஒரு தவறாக எழுதப்பட்ட வார்த்தை இவற்றை கண்டுபிடிக்க சொல்லி கண் பார்வையை சோதனை செய்ய மட்டுமே உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.
ஆனால் நம்முடைய குறிக்கோள் நல்ல கண் பார்வை பெறுவது அல்ல. எந்த ஒரு சிக்கலை சரி செய்ய நாம் ப்ரோக்ராம் எழுதுகிறோமோ அதிலிருந்து விலகாமல் சின்டாக்ஸ் தவறுகளால் மன உளைச்சலை ஏற்படுதிக்கொள்ளமலும் மிக விரைவாக வேலையே முடிப்பதே.
எனக்கு தெரிந்த வரையில் எக்லிப்ஸ் ஒரு நல்ல IDE.

எக்லிப்ஸ் ஐ பயன்படுத்த முதலில் நீங்கள் அதை டவுன்லோட் செய்ய வேண்டும். நீங்கள் அதற்கு http://www.eclipse.org  என்னும் வலை தளத்திற்கு செல்ல வேண்டும்.


மேற்கண்ட பக்கத்தில் "Downloads" எனும் லிங்கை கிளிக் செய்யவும். கீழேயுள்ள பக்கம் உங்களுக்கு கிடைக்கும். நீங்கள் டவுன்லோட் செய்ய வேண்டியது "Eclipse IDE for Java EE Developers" எனும் பாக்கேஜை. 



உங்களுடைய ஆபரேடிங் சிஸ்டமுக்கு தகுந்தாற்போல பாக்கேஜ்கள் காணப்படும். நான் இங்கு காட்டியுள்ளது Windows 32 Bit வெர்ஷனுக்கானது.
நீங்கள் அதை கிளிக் செய்தவுடன் அடுத்த பக்கத்தில் உங்களுக்கு வெவ்வேறு நாடுகளில் இருக்கும் செர்வர்களில் இருந்து டவுன்லோட் செய்ய முடியும். முதலில் இருக்கும் இடத்தில இருந்து டவுன்லோட் செய்து eclipse-jee-indigo-SR2-win32 .zip file ஐ save செய்து கொள்ளுங்கள். 

இதை unzip செய்ய winzip அல்லது 7zip என்னும் மென்பொருளை பயன்படுத்துங்கள். விண்டோசில் இருக்கும் unzip ஆப்ஷனை (zip file ஐ டபுள் கிளிக் செய்து) பயன்படுத்த வேண்டாம். நான் இதை C:\Software\Eclipse\ எனும் இடத்தில் இதை unzip செய்துள்ளேன்.

இப்போது எழுதப்படும் ப்ரோக்ராம்களை சேமிக்க ஒரு இடத்தை தேர்வு செய்ய வேண்டும். நான் தேர்வு செய்த இடம் C:\Dev\Java\Indigo2 . 

எக்லிப்ஸ் unzip செய்யப்பட இடமான (உங்களுக்கு இது வேறுபடலாம்) 
C:\Software\Eclipse\eclipse-jee-indigo-SR2-win32\eclipse எனும் போல்டருக்கு சென்று eclipse.ini எனும் file ஐ ஒரு Text Editor ல் திறவுங்கள். Notepad ஐ பயன் படுத்தாமல் wordpad ஐ பயன் படுத்தவும். 

eclipse.ini இலிருந்து முதல் 6 வரிகள் மட்டும் இங்கு காட்டப்பட்டுள்ளது.   

-startup
plugins/org.eclipse.equinox.launcher_1.2.0.v20110502.jar
--launcher.library
plugins/org.eclipse.equinox.launcher.win32.win32.x86_1.1.100.v20110502
-product
org.eclipse.epp.package.jee.product


ஐந்தாவது வரியில் நீங்கள் 4 வரிகளை (சிவப்பில் உள்ளது) செருக வேண்டும்.


-startup
plugins/org.eclipse.equinox.launcher_1.2.0.v20110502.jar
--launcher.library
plugins/org.eclipse.equinox.launcher.win32.win32.x86_1.1.100.v20110502
-vm
C:\Software\Java\jdk1.7.0_03/bin/javaw.exe
-data
D:\Dev\Java\Indigo2
-product
org.eclipse.epp.package.jee.product


(-vm) என்பது அதற்கு அடுத்த வரியில் உள்ள எங்கு ஜாவா இன்ஸ்டால் செய்யப்பட்டு javaw.exe உள்ளது என்பதை.
(-data ) என்பது ப்ரோக்ராம்களை சேமிக்கும் இடத்தை குறிப்பது. நான் பயன்படத்தும் இடங்களை இங்கே குறிப்பிட்டுள்ளேன். 

கடைசியாக C:\Software\Eclipse\eclipse-jee-indigo-SR2-win32\eclipse என்ற இடத்தில் உள்ள  eclipse.exe க்கு desktop ல் ஒரு shortcut உருவாக்க வேண்டும்.

இந்த shortcut ஐ டபுள் கிளிக் செய்து எக்லிப்ஸ் மென்பொருளை இயங்கச்செய்யலாம்.


மேலே காணப்படுவது எக்லிப்ஸ் உங்களை வரவேற்கும் ஸ்க்ரீன். இயங்க ஆரம்பித்ததும் நீங்கள் கீழே உள்ள ஸ்க்ரீனை பார்க்கலாம். மேலே வலது மூலையில் உள்ள Workbench (வளைந்த  அம்புக்குறி உள்ள ) ஐகானை கிளிக் செய்யுங்கள். 


கீழே உள்ளதுதான் Workbench. இதுதான் ப்ரோக்ராம்களை எழுதவும் இயங்கச்செய்து சரி பார்க்கவும் பயன்படுகிறது. இதில் மேலே ஒரு மெனு பாரும் அதன்க் கீழே ஒரு தூள் பாரும் உள்ளன. தூள் பாரிலேயே வலது பக்கத்தில் "Java EE" என்ற பட்டன் போன்ற ஒன்று உள்ளது. இது Perspective எனப்படும். இதைப்பற்றி பிறகு சொல்கிறேன்.
இடது பக்கம் "Package Explorer" என்ற விஎவ் உள்ளது. இதில்தான் ப்ராஜெக்ட் மற்றும் ஜாவா ப்ரோக்ராம்கள் லிஸ்ட் செய்யப்படும். 
வலது பக்கத்தில் Outline மற்றும் task list என்ற view கள் உள்ளன. கீழே Markers , Problems போன்ற view  கள் உள்ளன.
இந்த view களை நம் வசதி போல இடம் மாற்றிக்கொள்ள முடியும். நடுவில் காலியாக உள்ளதுதான் எடிட் செய்யும் இடம். 
Outline  view வை package explorer பக்கத்திலும் Task List ஐ கீழேயும் இழுத்து போட்டுவிட்டால் வலது பக்கம் காலியாகி விடும். அதனால் எடிட் செய்யும் இடம் பெரிதாகிவிடும். இது வசதியாகவும் இருக்கும்.



ஒரு ப்ரோக்ராம் எழுத முதலில் ஒரு ப்ராஜெக்ட் உருவாக்க வேண்டும். இதற்கு Project Explorer ல் mouse ஐ வைத்து right பட்டனை கிளிக் செய்ய கீழ்காணும் மெனு கிடைக்கும். 
இதற்கு பதிலாக மேலே உள்ள File மெனுவையும் கிளிக் செய்யலாம்.





நீங்கள் கிளிக் செய்ய வேண்டியது New மெனுவில் உள்ள சப் மெனுவில் உள்ள ப்ராஜெக்ட் எனும் ஆப்ஷனை.  உடன் உங்களுக்கு கீழே உள்ள விசார்ட் ஸ்க்ரீன் கிடைக்கும்.


இதில் உள்ள லிஸ்டில் "Java Project " எனும் ஆப்ஷனை கிளிக் செய்து கீழே உள்ள நேசத் பட்டனை கிளிக் செய்யவும். "New Java Project" எனப்படும் அடுத்த ஸ்க்ரீனில் "Project Name" ஐ கொடுக்கவும். இங்கே அது "Hello" என்று கொடுக்கப்பட்டுள்ளது.


மற்ற ஆப்ஷன்கள் எல்லாம் மேலே உள்ளது போல இருக்கும்படி செய்யவும். இவை எல்லாம் தானாக கிடைப்பவையே. பிறகு "Finish" பட்டனை கிளிக் செய்யவும்.

நாம் தேர்ந்து எடுத்தது "ஜாவா ப்ராஜெக்ட்" எனும் ப்ராஜெக்ட் வகையை. ஆனால் நாம் முதலில் இருந்தது "Java EE" எனும் Perspective. உங்களுக்கு உடனே கீழ்காணும் ஸ்க்ரீன் வரும். இது எக்லிப்ஸ் புதிய Java Perspective ஐ உங்களுக்கு உருவாக்கி தருவதற்காக கேட்கும் அனுமதி. நீங்கள் Remember My Decision என்பதை கிளிக் செய்து Yes பட்டனை கிளிக் செய்யுங்கள்.



இப்போது Hello எனும் ப்ராஜெக்ட் தயாராகிவிட்டது.
View களை இடம் மாற்றிய பிறகு உங்கள் workbench கீழே உள்ளது போல் இருக்கும்.



இப்போது ஒரு ப்ரோக்ராம் எழுத Project Explorer இல் உள்ள src யில் ரைட் கிளிக் செய்யவும். வரும் மெனு ஆப்ஷன்களில் New மற்றும் Class என்பதை செலக்ட் செய்யவும். கீழ்காணும் "New Java Class" ஸ்க்ரீன் கிடைக்கும்.


Package என்ற இடத்தில் com.cn.hello என்று கொடுக்கவும். Name என்ற இடத்தில் Greeter என்று கொடுக்கவும். இதுதான் கிளாஸ் நேம் எனப்படும். 

மற்ற ஆப்ஷன்கள் மேலே உள்ளது போல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளவும். Finish பட்டனை கிளிக் செய்தவுடன் உங்களுக்கு எடிட் View திறக்கும்.



எடிட் View ல் உள்ள Greeter.java வை கீழ்கண்டவாறு மாற்றவும்.

package com.cn.hello;

public class Greeter {

public static void main(String[] args) {
System.out.println("Hello, World");
}

}


இதை Run செய்ய (இயங்கச்செய்ய) Package Explorer இல் இருக்கும் Greeter.java வை ரைட் கிளிக் செய்ய வரும் மெனுவில் "Run As" எனும் ஆப்ஷனை செலக்ட் செய்து பிறகு வரும் மெனுவில் "Java Application" என்பதை கிளிக் செய்யவும்.

கீழே உள்ள Console View வில் இதனுடைய output காணக்கிடைக்கும்.


இதுவரை எல்லாம் ஒழுங்காக நடந்தால் நீங்கள் ஜாவா கற்றுக்கொள்ள தயாராக இருக்கிறீர்கள்.


சனி, 28 ஏப்ரல், 2012

படி 1 - ஜாவா இன்ஸ்டால் செய்ய

இந்த வலைப்பதிவின் நோக்கமே நீங்கள் சரியான படி ஜாவாவைக் கற்றுகொள்ள வேண்டும் என்பதுதான். அதற்குப் படிப்பை போலவே பயிற்சியும் முக்கியமான ஒன்று. 

இதைப்படிக்கும்போது நீங்கள் இதில் காணப்படும் ப்ரோக்ராம்களை முயன்று பாருங்கள். அதற்கு வேண்டிய முக்கியமான ஒன்றை இப்போது பார்க்கலாம்.


இப்போது நாம் பார்க்கப்போவது நம்முடைய கணினியில் ஜாவாவை எப்படி இன்ஸ்டால் செயவது என்பதை.


இதை JDK (Java Development Kit) என்று கூறுவார்கள். இது உங்கள் ப்ரோக்ராம்களை கம்பைல் (compile) செய்யவும் ரன் செய்யவும் பயன்படக்கூடிய பல கருவிகளையும் (Tools) மாதிரி ப்ரோக்ராம்களையும் கொண்டது.

நீங்கள் உங்கள் ப்ரௌசெரில் http://www.oracle.com/technetwork/java/javase/downloads/index.html என்ற வலைதளத்துக்கு செல்லுங்கள். 
நீங்கள் கீழ்க்காணும் பக்கத்தை பார்க்கலாம். இந்த பக்கத்தில் இருந்து நீங்கள் Java, JavaFX, Netbeans, Java EE போன்றவற்றை டவுன்லோட் செய்ய முடியும். 


நமக்கு தேவையானது JDK மட்டுமே. சிவப்பு வண்ணத்தில் அம்புக்குறியிட்ட இடத்தில கிளிக் செய்யுங்கள். இப்போது உங்கள் ப்ரௌசெரில் நீங்கள் பார்க்கும் பக்கம் கீழே காணப்படுகிறது. இந்த பக்கத்தில் நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் 
  1. Accept License Agreement - ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்
  2. பிறகு கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் இருந்து உங்கள் ஆபரேடிங் சிஸ்டமுக்கு ஏற்றதை கிளிக் செய்யுங்கள். 

என்னுடைய கணினியில் விண்டோஸ் 7 32 பிட் உள்ளது. அதனால் 
windows x86 (32 bit) சிஸ்டமுக்கு ஏற்ற JDK-7u3-windows-i586.exe என்ற லிங்கை அம்புக்குறியிட்டு காட்டியிருக்கிறேன். உங்களுக்கு தேவையானதை கிளிக் செய்து டவுன்லோட் செய்யுங்கள்.



டவுன்லோட் செய்த பைலை (JDK-7u3-windows-i586.exe) டபுள் கிளிக் செய்து ரன் செய்யுங்கள். இப்போது நீங்கள் கீழே பார்க்கும் விண்டோ உங்கள் திரையில் இருக்கும்.



"Next >" என்ற பட்டனை கிளிக் செய்யுங்கள்.


இந்த விண்டோவில் நீங்கள் எங்கே JDK ஐ இன்ஸ்டால் செய்ய வேண்டும் என்று சொல்லலாம். இன்ஸ்டாலர் தேர்வு செய்த இடம் "c:\Program Files\Java\jdk1.7.0_03\". இதை மாற்ற "Change..." பட்டனை கிளிக் செய்யுங்கள்.  நான் தேர்வு செய்த இடம் "C:\Software\Java\jdk1.7.0_03\".  என்னுடைய கணினியில் ஏற்கனவே ஒரு JDK (jdk1.6.0_17) உள்ளது. 


OK பட்டனை கிளிக் செய்யுங்கள். கீழ்க்காணும் ப்ரோக்ரேஸ் விண்டோ கிடைக்கும்.


இன்ஸ்டாலேஷன் முடிந்தவுடன் நீங்கள் கீழ்காணும் விண்டோவில் "Product Registration Information" பட்டனை கிளிக் செய்து ரெஜிஸ்டர் செய்து கொள்ளலாம். அல்லது "Continue" பட்டனை கிளிக் செய்து தொடரலாம்.


இப்போது JavaFX இன்ஸ்டால் ஆக ஆரம்பிக்கும். இது இன்ஸ்டால் ஆகும் இடத்தையும் நீங்கள் மாற்றலாம். அதற்கு "Browse ..." பட்டனை கிளிக் செய்யவும்.


"Next >" பட்டனை கிளிக் செய்ய இன்ஸ்டால் முடிவடையும்.

இப்போது கீழ்க்கண்டவற்றை செய்து முடிக்கவேண்டும்.

முதலில் JAVA_HOME என்ற environment variable செட் செய்ய வேண்டும். இதற்கு Desktop ல் உள்ள "Computer" அல்லது "My Computer" என்ற  icon ஐ Right-Click செய்து Properties என்ற மெனு ஆப்ஷனை கிளிக் செய்யவும். 
பிறகு "Advance system settings" ல் "Environment Variables.." பட்டனை  கிளிக் செய்ய வேண்டும். கீழே உள்ள "System Variables"  லிஸ்டின் கீழே உள்ள "New " பட்டனை கிளிக் செய்து "Variable Name" என்ற இடத்தில் "JAVA_HOME" என்று டைப் செய்யவும். "Variable Value" என்ற இடத்தில நீங்கள் ஜாவாவை இன்ஸ்டால் செய்த இடத்தை கொடுக்கவும். 
நான் கொடுத்த இடம் "C:\Software\Java\jdk1.7.0_03". 
OK ஐ கிளிக் செய்யவும். 

இப்போது நீங்கள் இந்த JAVA_HOME" ஐ  "System Variables" லிஸ்டில் பார்க்கலாம். 

அடுத்ததாக "System Variables" லிஸ்டில் "Path " என்று இருப்பதை செலக்ட் செய்யவும். பிறகு Edit பட்டனை கிளிக் செய்யவும். 
இப்போது"Variable Value" என்ற இடத்தில் இருப்பதன் கடைசியில் ";%JAVA_HOME%\bin\;"
என்பதை (சிவப்பில் இருப்பதை  மட்டும்) டைப் செய்து சேர்க்கவும்.
OK ஐ கிளிக் செய்யவும். 

இப்போது நீங்கள் "Command Prompt " ல் சென்று java -version என்று டைப் செய்யவும். அப்போது உங்கள்ளுக்கு கீழ்க்காணும் அவுட்புட் கிடைக்க வேண்டும்.

Microsoft Windows [Version 6.1.7601]
Copyright (c) 2009 Microsoft Corporation.  All rights reserved.

C:\>java -version
java version "1.7.0_03"
Java(TM) SE Runtime Environment (build 1.7.0_03-b05)
Java HotSpot(TM) Client VM (build 22.1-b02, mixed mode, sharing)

C:\>


நீங்கள் மேற்கண்டதை பார்க்கும் பட்சத்தில். 
கை கொடுங்கள் !  உங்களின் ஆரம்பம் மிக நன்றாக இருக்கிறது !

சரியாக வராதவர்கள் நண்பர்களிடம் உதவி பெறவும். Oracle வலை தளத்திலும் நீங்கள் உதவி பெறலாம்.

எதற்காக இந்த முயற்சி?

நேர்முகதேர்வுகளுக்காக பல முறைகள் கல்லூரிகளுக்கு சென்றபோதும் பொறியியல் பட்டப் படிப்பை  முடித்து வேலையில் சேர்ந்த பிறகு அளிக்கப்படும் பயிற்சியின் போதும் ஆயிரக்கணக்கான  மாணவர்களை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கடந்த ஏழெட்டு ஆண்டுகளாக  வாய்த்தது. இந்த உரையாடல்களின் போது எனக்கு இந்த மாணவர்களுக்கு கிடைக்கும் கல்வி பற்றிய  உண்மைகள் தெரிய வந்தது. 

மேலும் என் மகனுடைய +2 கணினி அறிவியல் ஆங்கில வழி பாடநூலை பார்த்தபோதும் ஆர்வத்தில் உந்தப்பட்டு தமிழ் வழி பாடநூலை படித்த போதும் வெறும் துயரமே மிஞ்சியது.
இதை பற்றியெல்லாம் என்னுடைய இன்னொரு வலைப்பூவில் (ப்ளாக்) விவரமாக எழுதிக்கொண்டிருக்கிறேன். 

கல்வி நிறுவனங்கள் கல்லூரியில் நடத்தப்படும் நேர்முகதேர்வுகளுக்கு நிறுவனங்களை அழைப்பதிலும் அதைப்பயன்படுத்தி மாணவர்களை சேர்ப்பதிலும் காட்டும் ஆர்வம் அவர்களுக்கு நல்ல கல்வி கொடுப்பதில் இல்லை. இதை நான் என்னுடைய வேலையை விட்டு விட்டு சொந்தமாக தொழில் தொடங்கிய பிறகு சந்தித்த கல்வியாளர்களிடமிருந்து அறிந்து கொண்டேன். 

தமிழ்நாட்டில் பொறியியல் படிக்கும் மாணவர்களில் பலர் அதற்கு முன் தமிழ் வழிக் கல்வி பயின்றவர்கள். கல்லூரியில் சேர்ந்த பிறகு ஆங்கிலத்தில் படிப்பது அவர்களுக்கு கடினமாக இருப்பது ஒரு புறம், அவர்களுக்கு கற்றுக்கொடுக்க நல்ல ஆசிரியர்கள் இல்லாதது இன்னொன்று. பொதுவாக எல்லோரும் தரமான நூல்களை படிப்பதில்லை. அப்படியே படிக்க கிடைத்தாலும் அது அவர்களுக்கு புரிவது கடினமாக உள்ளது. இதைப்பற்றியும் நான் எழுதிவிட்டேன்.

படித்து முடித்தபின் வேலை கிடைக்கும் வரை அவர்கள் இருபது முதல் ஐம்பது ஆயிரங்கள் வரை செலவு செய்து (பெற்றோர் காசைத்தான்) எங்காவது ஜாவா, டாட் நெட் போன்ற எதாவது ஒரு பயிற்சியில் சேர்கிறார்கள். அங்கும் அவர்களுக்கு முறையான கல்வி கிடைப்பது இல்லை.

நான் வேலை பார்க்கும் நிறுவனத்திற்காக இல்லாமல் நான் நடத்தும் நிறுவனத்திற்காக நேர்முகத்தேர்வு நடத்தும்போது பெரும்பாலோர் தமிழில் கேள்வி - பதில் இருப்பதை வசதியாக உணர்ந்தனர். மேலும் கடந்த வருடம் நான் பத்து பேருக்கு ஜாவா கற்றுத்தர வேண்டி இருந்தது. அவர்கள் அனைவருமே தமிழ்நாட்டின் சிற்றூர்களில் தமிழ் வழியில் படித்தவர்கள். பொறியியல் பட்டதாரிகளும் அல்ல. அவர்களுக்கு நான் தமிழிலேயே விளக்கங்கள் அளித்து கற்றுக்கொடுத்தேன். பயிற்சி முடிந்த பிறகு நான் அவர்களுக்கும் முன்பு என்னால் பயிற்றுவிக்கப்பட்ட பொறியியல் பட்டதாரிகளுக்கும் எந்த ஒரு வேற்றுமையையும் கண்டுபிடிக்க முடியவில்லை.

அதனால் தாய்மொழியில் பயிற்றுவிப்பதன் பயனை நான் அப்போதுதான் உணர்ந்தேன் என்பது அர்த்தம் அல்ல. ஏனென்றால் நானும் தமிழ் வழியில் பள்ளிப்பாடம் படித்தவன்தான். இது எனக்கு இந்த முயற்சிக்கான இன்னொரு உந்துதல்.

இன்னொரு செய்தி, இந்த வலைப்பதிவில் Techical terms எனக்கூறப்படும் கலைச்சொற்களை நான் தமிழ் படுத்தப்போவதில்லை. இதற்கு பல காரணங்களை என்னால் கூறமுடியும். 

1  தனித்தமிழ் தனித்தன்மையை  அளிக்கும் என்பதில் ஐயம் இல்லை. அனால் அது நம்மை தனிமைப்படுத்தி விடக்கூடாது. நாளை வேலை பார்க்கும் இடத்தில ஒரு தெலுங்கரிடமோ அல்லது ஒரு மலையாளியிடமோ போய் "Can you please explain this இனக்குழு ?" என்று கேட்பது நன்றாக இருக்காது.
2  இந்த வலைப்பதிவினால் பயனடையப்போகும் பலருக்கு "பஸ்ஸில் பயணம் செய்ய கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கு" அன்று சொன்னால்தான் புரியும். 
3  காலங்காலமாக நாம் சாப்பிடும் எலுமிச்சை சோறையும் தயிர் சோறையும் விற்பனை செய்யும்போது லெமன் ரைஸ் என்றும் கர்ட் ரைஸ் என்றும் சொல்லி பழக்கப்பட்டு விட்டோம். அது போல இதுவும் ஒரு வணிக நோக்கம்தான். உங்கள் அறிவை விற்க ஆங்கிலத்தை பயன் படுத்துங்கள். அதை புரிந்து கொள்ளவும் தெளியவும் தாய் மொழியை பயன் படுத்துங்கள்

இது தமிழ் மாணவர்கள் பயனடைவதற்கான ஒரு முயற்சி அவ்வளவுதான்.

இதைப்படிப்பவர்கள் கேள்விகளையும் கருத்துக்களையும் தயங்காமல் தெரிவியுங்கள். என்னால் முடிந்த உதவிகளை செய்கிறேன். 

நன்றி
பாலா